நடிகை ஸ்ருதிஹாசன் ’தேவி’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சர்வதேச பெண்கள் தினத்தன்று வெளியாகிறது.
பரியங்கா பானர்ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தக் குறும்படத்தில் நேஹா தூபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மாத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஷ்வினி தாயம், ஸ்ருதிஹாசன் என அனைவரும் பெண் நடிகர்களே. அடக்குமுறைக்கு ஆளான ஒன்பது பெண்கள் ஒன்றாக இருக்கும் சூழலைப் பற்றிய படம் இது. அனைத்து கதாபாத்திரங்களின் பின்புலனும் வித்தியாசமானதாக இருந்தாலும் அனைவரும் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
மதுரையில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை ஸ்ருதிஹாசன், இந்தத் திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார். "’தேவி’ பல விதங்களில் எனக்கு முதல் முயற்சி. மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தன்று வெளியாகிறது. பெண்களை மையமாகக் கொண்ட வலிமையான ஒரு திரைப்படத்துக்கு இதை விடச் சரியான தேதி இருக்க முடியாது.
இது முற்றிலும் வேறுவகையான திரைப்படம். காஜோல் போன்ற மிகத் திறமையான நடிகருடன் முதல் முறை இணைந்து நடித்தது என் அதிர்ஷ்டம். பெண்களின் வலிமை, அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் ஆதரித்துக் கொள்கின்றனர் என்பதை மனதை உருக்கும் வகையில் காட்டி உங்களைப் பாதிக்கும் திரைப்படம் இது. நான் மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.