உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள் என்று மாணவர்களுக்கு கார்த்தி தன் பேச்சில் அறிவுரை வழங்கினார்.
அகரத்தின் தொலைவைக் கடந்துவரத் துணை நின்ற அறம் சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் 'தடம் விதைகளின் பயணம்' நிகழ்வு நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசும் போது, "இங்கு அனைவரிடத்திலும் ஒரு பெரிய சந்தோஷத்தைக் காண முடிகிறது. அகரம் குழுவிடம் உற்சாகத்திற்கு என்றும் குறைவிருக்காது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறேன். நான் இங்கு ஒரு விருந்தினராக வந்துள்ளேன். என்றுமே வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் உள்ளது.
ஆகவே நாம் வாங்கிக் கொண்டாலும் கொடுக்கும் நிலையை என்றும் பின்பற்றுவோம். மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவது நம் சந்தோஷத்தை நிலை நிறுத்தும்.உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் மற்றவர்களை விட மேலானவரும் இல்லை, கீழானவரும் இல்லை, சம நிலையில் உள்ளவரும் இல்லை. நீங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவர். மற்றவர் பெறும் வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் என்றுமே தேடல் என்பது தேவை. நாம் எப்போதும் நம் வாழ்வில் புது தேடலைக் கண்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சமநிலை மிகவும் முக்கியமானது. திருமணமான பின்பு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத்தன்மை, தேடல், சம நிலை ஆகியவை உங்கள் வாழ்வில் முக்கியம்" என்று பேசினார் கார்த்தி.