அரசியலில் ரஜினி - கமல் இருவரில் யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பதிலளித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'லிங்கா'. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கதைச் சர்ச்சையில் சிக்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு தயாரிப்பு தரப்பினருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இந்த வழக்கில் என்னவெல்லாம் நடந்தது, எதிர்த்தரப்பு என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.
அதில், "ரஜினி - கமல் இருவருக்குமே நீங்கள் நண்பர். கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார். இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு?" என்ற கே.எஸ்.ரவிக்குமாரிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், "இனிமேல் இருவருக்குமே நண்பராக இருக்கக் கூடாது என்று ப்ளான் பண்றீங்க. இதை இப்போது எப்படிச் சொல்ல முடியும். நான் யாருக்கு ஒட்டுப் போட்டேன் என யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதைச் சொல்லவும் கூடாது.
யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறது, இரண்டு பேருக்குமே கைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவதா என்பது அன்றைய காலச்சூழலில் தான் தெரியும். ரஜினி சார் முதலில் கட்சித் தொடங்கி வரட்டும். அப்புறம் முடிவு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.