சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'நாடோடிகள் 2' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
'நாடோடிகள்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'நாடோடிகள் 2' படத்தை இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி. முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் அனைத்துமே முடிவடைந்துவிட்டாலும், பைனான்ஸ் சிக்கலால் படத்தின் வெளியீடு தடைப்பட்டுக் கொண்டே வந்தது.
பல மாதங்களாக அவ்வப்போது இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இந்தநிலையில், தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டு, ஜனவரி 31-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் சமுத்திரக்கனி படங்கள் இயக்கிக் கொண்டே சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் யாவுமே நல்ல வரவேற்பு பெற்று வருவதால், இவருக்குப் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.