தமிழ் சினிமா

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' கைவிடப்பட்டது ஏன்? - ஐசரி கணேஷ் வெளிப்படை

செய்திப்பிரிவு

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டது ஏன் என்று முதல் முறையாக ஐசரி கணேஷ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சாயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'. நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக விஷால் - கார்த்தி இருவருமே சம்பளமின்றி ஒப்புக் கொண்ட படம் என்று தகவல் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார்.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே கைவிடப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று யாருமே அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. தற்போது, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஐசரி கணேஷ்.

அப்போது நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, "கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்றால் மேல்முறையீடு செல்வோம் என்று சொல்லக் கூடாது. மேல்முறையீடு சென்றால் கட்டிடம் முடிய இன்னும் 6 மாதம் முதல் 1 வருடம் ஆகலாம். அப்புறம் எப்படிக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியும்.

ஓராண்டாகவே கட்டிடத்தின் பணிகள் எதுவுமே நடக்கவில்லை. இங்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இதுவரைக்கும் எங்கும் சொல்லவில்லை. அந்தக் கட்டிடத்துக்காக விஷால் - கார்த்தி இருவரையும் வைத்து ஒரு படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தைத் தொடங்கினேன். பிரபுதேவா இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்று அனைவருக்குமே பணம் கொடுத்தேன்.

5 பாடல்கள் ரெக்கார்ட் செய்து, ஒரு வாரம் படப்பிடிப்பும் சென்றது. இந்தப் படத்தில் விஷால் - கார்த்தி இருவருக்குமே படம் வியாபாரமானவுடன் சம்பளம் தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் படத்தின் வியாபாரமாகக் கணக்கிட்ட போது டேபிள் லாபமாக 15 கோடி வந்தது. ஆனால், அந்தப் படத்தில் விஷால் வந்து நடிக்கவே இல்லை. அன்றைக்கு மட்டும் வந்து நடித்திருந்தால், இன்று கட்டிடம் முடிந்து திறக்கப்பட்டு இருக்கும். கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. அப்படி இருந்தால் அன்றைக்கே அந்தப் படத்தில் நடித்திருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெளிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT