மணிரத்னம் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும் என்று 'வானம் கொட்டட்டும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் பேசினார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. தனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
'வானம் கொட்டட்டும்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சரத்குமார் - ராதிகா சரத்குமார் ஒன்றாக மேடையேறிப் பேசினார்கள். இதில் முதலில் பேசிய ராதிகா, "சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். ரொம்ப நல்லாயிருக்கு என்றவுடன் நான் கேட்டேன். எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது.
நிறைய படங்களில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டோம். ஆனால், ஒரு சில கதைகளைக் கேட்கும் போது தான் அந்த இயக்குநர் எவ்வளவு தெளிவாக இருக்கிறார் என்பது தெரியும். அந்தளவுக்கு ரொம்பவே தெளிவாக இருந்த தனாவுக்கு நன்றி.
மணிரத்னம் அவருக்கு தெரியாமல் என்னை 2-வது படத்தில் பரதநாட்டிய நடனக் கலைஞராக நடிக்க வைத்துவிட்டார். அவர் பட்ட கஷ்டம் அவருக்கும் எனக்கும் தான் தெரியும். ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார்” என்று பேசினார் ராதிகா சரத்குமார்.
அவரைத் தொடர்ந்து சரத்குமார் பேசும் போது, "தனா கதை கூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாகத் தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகக் கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி" என்று பேசினார் சரத்குமார்.