தமிழ் சினிமா

மேல்முறையீடு செல்லாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும்: விஷால் அணிக்கு ராதாரவி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மேல்முறையீடு செல்லாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று விஷால் அணிக்கு ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என அறிவித்து 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் நடிகர் சங்கத்தில் பதவியில் இருக்கும் போது, ராதாரவியை சங்கத்திலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீக்கினார்கள். தற்போது இந்தத் தீர்ப்பு தொடர்பாக ராதாரவியிடம் கேட்ட போது, "சாதாரண உறுப்பினர்களுக்குப் பணம் வர வேண்டும். ஆகையால், உடனடியாக நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து மறுதேர்தல் வையுங்கள் என்று நீதிமன்றம் சொன்னது நல்ல விஷயம்.

ஏனென்றால், என்னை நீக்கியதே தவறு, சட்டப்படி செல்லாது. என்னையே உள்ளே வரக்கூடாது என்று நினைத்துச் செய்தார்கள். கெடுவான் கேடு நினைப்பான். விஷால் நல்ல தம்பி தான். ஆனால், கால் வைத்தால் குளத்து ஆமை மாதிரி. அவர் கால் வைத்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்துமே நாசமாய் போய்விட்டது. ஒழுங்காக இருந்தால் நல்லபடியாகப் போயிருக்கும்.

விஷால் அணி முதலில் காலதாமதமாகத் தேர்தல் நடத்தியது தவறு. அதே போல் நிறையக் குளறுபடிகள் இருக்கிறது. பென்சன் கொடுக்க முடியாமல் உள்ளது என்று விஷால் அணியினர் புலம்பினார்கள். இப்போது உண்மையிலேயே அவர்கள் உச்ச நீதிமன்றம் செல்லாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சென்றால் அந்த வழக்கு முடிய 3 வருடங்களாகிவிடும்" என்று தெரிவித்துள்ளார் ராதாரவி.

SCROLL FOR NEXT