தமிழ் சினிமா

கருணாநிதி பயோபிக் உருவாகுமா? - உதயநிதி ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

கருணாநிதி பயோபிக் உருவாகுமா, அதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் மட்டுமன்றி இப்போது இந்தியத் திரையுலகிலேயே பயோபிக்கின் காலம். பல்வேறு பிரபலங்களின் பயோபிக் படங்கள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் 'தலைவி' என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

அதேபோல் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பயோபிக்கும் உருவாகுமா, அதில் கருணாநிதியாக யார் நடித்தால் சரியாக இருக்கும், யார் இயக்குவார் உள்ளிட்ட கேள்விக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

கருணாநிதி பயோபிக் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், "பலரும் இது தொடர்பாகக் கேட்டார்கள். அந்தப் பட விஷயத்தில் இயக்குநர், நடிகர்களை அப்பா தான் முடிவு செய்வார். தாத்தாவின் வாழ்க்கையை ஒரு படத்தில் முடிக்க முடியாது. அந்தப் படத்தில் தாத்தாவாக யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை. கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன். அதை அந்தப் படத்தை இயக்குபவர் முடிவு செய்யட்டும்.

இப்போது தாத்தாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். ’மனிதன்’ படத்தை அவர் பார்க்க வேண்டும். அதில் உள்ள நீதிமன்ற விவாதக் காட்சிகளை அவர் ரொம்பவே விரும்புவார் என நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அதில் எனக்கு ரொம்பவே வருத்தம். தாத்தாவின் உழைப்பை, பேச்சை தினமும் நினைத்துப் பார்க்கிறேன். இன்றைக்கும் நான் கிராமங்களுக்குச் செல்லும் போது 'கலைஞர் பேரன்' என்று என்னை ரொம்பப் பாசமாக நடத்துகிறார்கள்" என்று பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

SCROLL FOR NEXT