தமிழ் சினிமா

மீண்டும் ‘கண்ணின் மணி’

செய்திப்பிரிவு

‘சித்தி - 2’ குழுவினருடன் ராதிகா.சன் டிவியில் ‘சித்தி 2’ தொடர் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. 22 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரித்த முதல் தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது ‘சித்தி’. இப்போது அதே வாசனையுடன் புதிய பரிமாணத்தில் வித்தியாசமான நட்சத்திரங்களோடு களம் இறங்குகிறார் ராதிகா.

அவருடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சமுத்திரகனி இருவரும் சிறப்புத் தோற்றம் ஏற்று நடிக்கின்றனர். ரூபிணி, மீரா வாசுதேவன், ஷில்பா, மகாலட்சுமி, பிரீத்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் இதில் நடிக்கின்றனர்.

ராதிகாவின் மூத்த மருமகளாக மகாலட்சுமி நடிக்கிறார். புதிய தொடரில் நடிக்கும் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

எனக்கும் ராதிகாவின் ரடான் நிறுவனத்துக்கும் பல ஆண்டுகால நட்பு உண்டு. முதன்முதலாக ‘அரசி’ தொடர் வழியே அவருடன் இணைந்து நடிக்கத் தொடங்கினேன். அடுத்தடுத்து ‘செல்லமே’, ‘வாணி ராணி’ என பயணித்து, இப்போ ‘சித்தி 2’ வரை வந்திருக்கேன். நடிப்பில் ராதிகாதான் எனக்கு எப்பவுமே ரோல்மாடல்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரின் ‘கண்ணின் மணி’ பாடல் கேட்டு வளர்ந்தவள் நான். இன்று அதே பாடலோடு ஒளிபரப்பாகும் 2-ம் பாகத்தில் ராதிகாவின் மூத்த மருமகளாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆரம்பத்தில் என்னுடையது பாசிடிவ் கதாபாத்திரமாகவே நகரும். போகப்போக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல நெகடிவ்வாக மாறினாலும் மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT