தமிழ் சினிமா

1917-ஐ விட என் படம் சிறப்பாக இருக்கும்: பார்த்திபன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

'1917' படத்தை விட என் படம் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'இரவின் நிழல்' படத்தை இயக்கி தயாரிக்கவுள்ளார் பார்த்திபன். இந்தப் பணிகளுக்கு இடையே விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் 'துக்ளக் தர்பார்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன்.

'இரவின் நிழல்' படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். சமீபத்தில் வெளியாகியுள்ள ஹாலிவுட் படமான '1917' படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் தொடர்பாகத் தனது யூடியூப் சேனலில் பார்த்திபன், " 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். ஒரு படத்தில் நடித்தால் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன். சமீபத்தில் ஒரு காமிக்ஸ் புக் பார்த்தேன்.

ரொம்ப நன்றாக இருந்ததினால், மணி சாருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு, 'இதே மாதிரியாவது அந்தப் படத்தை எடுத்துவிடுவேன்' என்ற நம்பிக்கை இருக்கு என மெசேஜ் பண்ணினார். அந்தப் படத்தில் நான் இல்லாவிட்டாலும், அவருடனான நட்பு எனக்குச் சிறப்பாக இருக்கிறது. சமீபத்திய 15 நாட்களாக விஜய் சேதுபதியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். பொய், பகட்டு இல்லாத மனிதர்.

'1917' என்ற படம் சிங்கிள் ஷாட் என்றவுடன் பயந்துவிட்டேன். ஏனென்றால் நம்மை விட ஹாலிவுட்காரன் சிறந்த படம் பண்ணிவிடக் கூடாது என நினைப்பேன். 20 நிமிடங்களாக எடுத்துச் சேர்க்கப்பட்டது என்றார்கள். போர் பின்னணியிலான படம் என்பதால் இதற்கே ரொம்ப ஆச்சரியப்பட்டேன். கூடிய விரைவில் அந்தப் படத்தைப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்படித்தான் நம்முடைய எண்ணத்தைக் கொஞ்சம் பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அந்தப் படத்தைவிட ஏதோ ஒரு வகையில் என் படம் சிறப்பாக இருக்கும். சத்தியமாகக் காப்பியடிக்க மாட்டேன்.

'இரவின் நிழல்' படத்துக்காகப் பெரிதாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். கூடவே ஒரு காமெடி கதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு வெப் சீரிஸும் பண்ணவுள்ளேன். அது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும். அதில் வெறும் நடிப்புதான்" என்று பேசியுள்ளார் பார்த்திபன்.

SCROLL FOR NEXT