இங்கு பாஜகவின் கண்ஜாடையில் அதிமுக ஆட்சி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் உலகமெங்கும் நாளை (ஜனவரி 24) வெளியாகவுள்ளது.
'சைக்கோ' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார் உதயநிதி. அந்தப் பேட்டியில், “எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என அனைவருமே நினைத்தார்கள். ஆனால், இன்னும் ஆட்சி தொடர்கிறதே...” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், "முதலில் இது எடப்பாடி ஆட்சியே அல்ல. பாஜகவின் ஆட்சி. பாஜகவின் கண் ஜாடையில் தான் இங்கு ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது பார்க்கவில்லை. ஆனால், இப்போது ரயில்வே அமைச்சர் கூப்பிட்டதற்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் போகிறார்கள்.
பாஜகவின் அடிமை ஆட்சிதான் இது. பாஜகவுடன் கூட்டணி இருக்கும் வரை இந்த ஆட்சி தொடரும். கூட்டணி முறிந்தவுடன் ஆட்சியும் முடிந்துவிடும். ஆடிட்டர் குருமூர்த்தி நீங்கள் எல்லாம் ஆம்பளையா என்று ஒருவரைப் பார்த்துக் கேட்டதாக அவரே சொன்னார். ஆனால், யாரைப் பார்த்துச் சொன்னாரோ அவரைத் தவிர மீதமுள்ள அனைவரும் கோபப்பட்டார்கள்" என்று பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.