தமிழ் சினிமா

'ஆயிரத்தில் ஒருவன் 2' யார் கையில்? - பார்த்திபன் பதில்

செய்திப்பிரிவு

'ஆயிரத்தில் ஒருவன் 2' உருவாக்கம் யார் கையில் இருக்கிறது என்ற கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. ரவீந்திரன் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவினாலும், இப்போது வரை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

'ஆயிரத்தில் ஒருவன்' 2-ம் பாகம் வெளிவருமா என்ற கேள்வி துரத்திக் கொண்டே இருக்கிறது. மீண்டும் அந்தக் கேள்விக்குத் தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் பதிலளித்துள்ளார் பார்த்திபன்.

அதில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' குறித்து, "'ஆயிரத்தில் ஒருவன் 2' எப்போது வரும் என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறார்கள். அது முழுக்க செல்வராகவன் கையில் கூட இல்லை. தயாரிப்பாளர் கையில் இருக்கிறது. சினிமா என்பது முழுக்க வியாபாரம் சம்பந்தப்பட்டது. எத்தனை கோடி போட்டால் எத்தனை கோடி வரும் என்றுதான் பார்ப்பார்கள்.

எனக்கே தெரியும் இன்றைக்கு அந்தப் படம் எடுத்தால் பெரிதாக வசூல் செய்யும். அவ்வளவு பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான படம் அது. நான் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ’ஆயிரத்தில் ஒருவன்’ நடிக்கும்போது இரண்டரை ஆண்டுகள் தாலி கட்டிக் கொண்டு செல்வராகவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தேன். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மற்றும் நான் ஆகியோரும் அந்தக் குடும்பத்தில் அடங்கும்" என்று பேசியுள்ளார் பார்த்திபன்.

SCROLL FOR NEXT