தமிழ் சினிமா

25-வது ஆண்டுக் கொண்டாட்டம்: ஷங்கருக்காக மிஷ்கின் எழுதிய பாடல்

செய்திப்பிரிவு

திரையுலகில் ஷங்கரின் 25-ம் ஆண்டுக் கொண்டாட்டத்தில், அவருக்காக எழுதிய பாடல் வரிகள் குறித்து மிஷ்கின் கூறியுள்ளார்.

திரையுலகில் ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனைச் சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் மிஷ்கின் தனது வீட்டில் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் மணிரத்னம், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக எந்தவொரு தகவலையுமே மிஷ்கின் வெளியே சொல்லவில்லை.

தற்போது 'சைக்கோ' படம் தொடர்பாக மிஷ்கின் அளித்துள்ள பேட்டியில், ஷங்கருக்கான கொண்டாட்டம் தொடர்பாகப் பேசியுள்ளார். அதில், "அந்த நிகழ்வைப் பற்றி பெரிதாகப் பேசவில்லை. ஏனென்றால் மணி சார் எல்லாம் வந்திருக்கும்போது அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் ஒன்று கூடினோம் என்று புகைப்படங்கள் மட்டும் கொடுத்தேன். ஷங்கர் சாரைக் கொண்டாடியது போலவே பாரதிராஜா சார், பாக்யராஜ் சாரைக் கொண்டாட முடிவு செய்துள்ளேன்.

அதேபோல் டி.ராஜேந்தர் சாரையும் கொண்டாடவுள்ளேன். அவ்வளவு பெரிய ஜீனியஸ் அவர். அவரிடம் கூட இது தொடர்பாகப் பேசியிருக்கிறேன். ஒரு நாள் இரவு முழுக்க அவருடன் இருந்து, அனுபவங்களைச் சொல்லுங்கள் சார் என்று கேட்க ஆசை. மணி சார் தொடங்கி அனைவருமே பேசும்போது, படுத்துக் கொண்டே குழந்தை மாதிரி கேட்டுக்கொண்டோம்.

ஷங்கர் சார் 25 ஆண்டுகள் கொண்டாட்டத்துக்கு அடுத்த நாள் மணி சார், "திரும்ப ஸ்கூலுக்குப் போனது மாதிரி இருந்தது. அவ்வளவு ஜாலியாக இருந்துச்சு மிஷ்கின்" என்று மெசேஜ் பண்ணியிருந்தார். அதுதான் தேவை. திரும்பவும் அனைவரையும் குழந்தைகள் ஆக்குகிறேன். ஷங்கர் சாருக்காக ஒரு பாடல் ஒன்றையும் உருவாக்கி அந்த நிகழ்வில் பாடினேன்.

அந்தப் பாடல் வரிகள்

கனவுல றெக்க முளைச்சு பறக்குது உன்னால...
நினைவுல வேர் முளைச்சு வளருது மரமாக...
விடுகதையா வாழ்வு இங்கு கேள்வி கேட்குது...
பெரும் கதையா நீ சொல்ல.. வாழ்க்கை இனிக்குது...

இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT