தமிழ் சினிமா

ரஜினிக்குப் பிரச்சினையில்லை என்றால் எனக்குமில்லை: உதயநிதி ஸ்டாலின்

செய்திப்பிரிவு

ரஜினிக்குப் பிரச்சினையில்லை என்றால் எனக்குமில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'பேட்ட', 'காஞ்சனா 3' மற்றும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஆகிய படங்களை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலமாகவே விநியோகம் செய்தது. இந்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் எப்போது வெளியீடு என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே, துக்ளக் விழாவில் ரஜினி பேசிய கருத்துகளால் திமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ரஜினியின் கருத்து தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலருமே எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதனால், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு ”சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நான் விநியோகிப்பேன். ரஜினி சாருக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் எனக்கு ஏன் அதில் பிரச்சினை இருக்கப் போகிறது” என்று பதிலளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

SCROLL FOR NEXT