தமிழ் சினிமா

கைப்புள்ள கதாபாத்திரத்தின் பின்னணி: சுந்தர்.சி - வடிவேலு பகிர்வு

செய்திப்பிரிவு

கைப்புள்ள கதாபாத்திரத்தின் பின்னணி குறித்து இயக்குநர் சுந்தர்.சி மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் பகிர்ந்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் காமெடி மூலமாக பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. ரஜினி, கமல், அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். அவர் இன்று (ஜனவரி 21) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

சுந்தர்.சி படங்களில் வடிவேலு காமெடியில் கலக்கிய படங்கள் என்றால் 'வின்னர்', 'தலைநகரம்' ஆகியவற்றைச் சொல்லலாம். இதில் 'வின்னர்' படத்தில் வடிவேலு நடித்த கைப்புள்ள கதாபாத்திரம் மிகவும் பிரபலம். ஒரு சில படங்கள் இணைந்து பணிபுரிந்தாலும், கருத்து வேறுபாட்டால் பின்பு பணிபுரியாமலே இருந்து வருகிறார்கள்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சுந்தர்.சி - வடிவேலு இருவருமே ஒன்றாக மேடையில் பேசியுள்ளனர். அதில் இருவருமே தங்களுடைய படங்களின் நினைவுகளைத் தெரிவித்துள்ளனர். 'கைப்புள்ள' கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சுந்தர்.சி, "கைப்புள்ள என்ற கதாபாத்திரம் நான் உருவாக்கியது அல்ல. அது முழுக்கவே வடிவேலு என்ற மகா நடிகருடைய கைவண்ணம் தான். 'வின்னர்' படம் பண்ணும்போது வடிவேலு அண்ணனுக்கு ஒரு படப்பிடிப்பில் கால் உடைந்துவிட்டது. 'என்ன அண்ணே.. இப்போ போய் கூப்பிடுறீங்க. நடக்கவே முடியலயே அண்ணே' என்று சொன்னார் வடிவேலு.

'சரி அண்ணே. முதல் காட்சியிலேயே உங்களுக்குக் கால் உடையுற மாதிரி ஒரு காட்சி வைச்சிருவோம். அதுக்கு அப்புறம், படம் முழுக்க நொண்டி நொண்டி நடந்தால் தப்பாகத் தெரியாது. பரவாயில்லையா..' என்று கேட்டேன். சூப்பர் அண்ணே. அப்படின்னா.. இப்படியெல்லாம் நடந்தால் நல்லாயிருக்கும்ல என்று ஒரு 10 விதமா நடந்து காட்டினார்.

அப்போது வடிவேலு அண்ணனை உசுப்பேற்றும் விதமா, 2-வது நடையில் தோள், 5-வது நடையில் கால், 8-வது நடையில் முகத்தின் லுக் என அனைத்தையும் பிக்ஸ் பண்ணிக்கலாம் என்று சொன்னேன். உடனே அப்படியே நடந்து காட்டினார். இப்போதும் பார்த்தீர்கள் என்றால் முகம் கம்பீரமாக இருக்கும். ஆனால், தோளை ஒரு மாதிரி சிலுப்பிக் கொண்டே நொண்டி நடப்பார். அவர் மகா நடிகர். நாங்கள் எல்லாம் ஒரு கோடு.

அதேபோல் 'தலைநகரம்' படத்தில் 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மன்ட் வீக்' காட்சியை எடுக்க 5 நிமிடங்கள்தான் இருந்தது. அதற்குள் கொரில்லா செல், வெளியே வந்து டயலாக் என அனைத்தையும் முடித்துவிட்டார். அவரோடு பணிபுரிந்தது எல்லாம் ஆண்டவன் எனக்குக் கொடுத்த கொடுப்பினைதான்" என்று பேசினார் இயக்குநர் சுந்தர்.சி.

அதனைத் தொடர்ந்து வடிவேலு பேசும்போது "எனக்கும் சுந்தர் அண்ணனுக்கும் ரொம்பவே ஒத்துப்போகும். 'தலைநகரம்' படத்தில் கூட 'ஏரியாவுக்கு வாடா' என்ற காட்சியின் இறுதியில் 10 டேக் வரை வாங்கிவிட்டேன். அவர் காலில் விழுந்து 'என்னால முடியலப்பா' என்று அழுவேன். அதில் என்னாலும், அவராலும் நடிக்க முடியவில்லை. நகைச்சுவைக் காட்சியில் எனக்கும் அவருக்கும் ரொம்பவே ஒத்துப்போகும். படப்பிடிப்புத் தளத்திலேயே நிறைய காமெடிகள் வரும்" என்று பேசினார் வடிவேலு.

SCROLL FOR NEXT