'வலிமை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாமி கவுதம் விலகிவிட்டதால், அவருக்குப் பதிலாக ஹியூமா குரோஷி நடித்து வருகிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, ’வலிமை’ படத்தில் அஜித் - ஹெச்.வினோத் இருவரும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. தற்போது சென்னையில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். இதனிடையே, இந்தப் படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள் யாரையுமே படக்குழுவினர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
முதலில் யாமி கவுதம் நாயகியாக நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் மறுப்பு தெரிவிக்காததால் இது உண்மையாக இருக்கும் என்று கருதினார்கள். தற்போது இந்தப் படத்திலிருந்து யாமி கவுதம் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹியூமா குரோஷி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஹியூமா குரோஷி கலந்து கொண்டுள்ளார். விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பாக, பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த 'காலா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஹியூமா குரோஷி நடித்திருந்தார். அவரது 2-வது தமிழ்ப் படமாக 'வலிமை' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்து வருகிறார்.