தமிழ் சினிமா

தமிழகத்தைக் கழிவுக் கிடங்காகப் பார்க்காதீர்கள்: மத்திய அரசு மீது இயக்குநர் அமீர் விமர்சனம்

செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் இயக்குநர் அமீர்.

அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாயநதி'. அபி சரவணன், வெண்பா, 'ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை முகில் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பவதாரிணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 20) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினரோடு இசையமைப்பாளர் யுவன், இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் இயக்குநர் அமீர்.

இது தொடர்பாக இயக்குநர் அமீர் பேசியதாவது:

"ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக முதல் நபராகப் போராட்டத்தில் குதித்தவர் பாடகர் செந்தில். மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது மத்திய அரசு. ஆனால், இப்போது மத்திய அரசு அசுர பலமாக இருக்கிறது. நினைத்ததை எல்லாம் செய்யும்.

நேற்றைக்கு மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உங்களுக்கு அருகில் எங்கெல்லாம் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதோ, அதெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். மக்களிடம் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற அராஜக உத்தரவை மத்திய அரசு போட்டுள்ளது. இங்குள்ள பிரச்சினைகளைத் திசை திருப்ப, CAA, NRC போன்ற திட்டங்களுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது சத்தமின்றி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை வெறும் வாக்காகவோ, கழிவுக் கிடங்காகவோ பார்க்காதீர்கள். ஊரில் உள்ள குப்பையை எல்லாம் கொண்டு வந்து கொட்டும் இடம் இதுவல்ல. தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல. கொஞ்சமாவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள். சட்டமும் திட்டமும் மக்களுக்கானது. அதை முதலில் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

இங்கிருக்கும் மக்கள் ஓட்டுப் போட்டு இருவரை ஆட்சியில் அமர வைத்தோம். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், உனக்குக் குடியுரிமை கிடையாது என்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் போட்ட ஓட்டும் செல்லாததுதானே. செல்லாத ஓட்டை வாங்கி நீங்கள் எப்படி மேலே இருக்க முடியும். இந்தக் கேள்வியை எல்லாம் கேட்பதால்தான் பிரச்சினையாகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு இயக்குநர் அமீர் பேசினார்.

SCROLL FOR NEXT