'சில்லுக் கருப்பட்டி' படம் குறித்த ஜான் மகேந்திரனின் ட்வீட்டால், இயக்குநர் ஹலிதா ஷமீம் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி, சக்திவேலன் வழியே வெளியிட்டுள்ளது.
விமர்சன ரீதியாக இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகின்றன. இப்போது சில திரையரங்குகளில் 'சில்லுக் கருப்பட்டி' திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பதிவில், "அப்பா உயிரோடு இருந்திருந்தால் சில்லுக் கருப்பட்டியைக் கொண்டாடி இருப்பார்" என்று ஹலிதா ஷமீமின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஹலிதா ஷமீம், "ஐந்து நிமிடங்கள் உங்கள் பதிவையே பார்த்துக் கொண்டிருந்தேன். காட்சிகள் விரிந்தன, அவர் வாழ்த்துவது போல். அவரிடம் ஆசி வாங்கியதாக உணர்கிறேன். அளவற்ற அன்பும் நன்றியும்!" என்று தெரிவித்துள்ளார்.