தமிழ் சினிமா

’தர்மதுரை’, ‘ஈரமான ரோஜாவே’, ‘கும்பக்கரை தங்கய்யா’ சூப்பர் ஹிட்! 91-ல் பொங்கலுக்கு 11 படங்கள் ரிலீஸ்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி

1991ம் ஆண்டு, பொங்கல் திருநாளுக்கு 11 படங்கள் வெளியாகின. ரஜினியின் ‘தர்மதுரை’, ‘ஈரமான ரோஜாவே’, ‘கும்பக்கரை தங்கய்யா’ முதலான படங்கள் வெளியாகி ஹிட்டடித்தன.

91ம் ஆண்டு பொங்கலுக்கு ஏராளமான படங்கள் வந்தன. அப்போது ராமராஜன் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார். அந்த வருடம் பொங்கலுக்கு, ‘நாடு அதை நாடு’ என்ற படம் வெளியானது. ராமராஜனுடன், ரூபினி, கவுண்டமணி, செந்தில் முதலானோர் நடித்தனர். தேவா இசையமைத்தார்.

அதே வருடத்தில், பொங்கலுக்கு கவிதாலயாவின் தயாரிப்பில், ‘சிகரம்’ வெளியானது. எஸ்.பி.பி., ராதா, ரம்யாகிருஷ்ணன், ஆனந்தபாபு முதலானோர் நடித்திருந்தனர். கே.பாலசந்தரின் வலதுகரமாகத் திகழ்ந்த, அனந்து இயக்கினார். எஸ்.பி.பி.யின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.


பார்த்திபன் நடிப்பில், மகேந்திரன் கதை, வசனத்தில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது ‘தையல்காரன்’. ஐஸ்வர்யா, சர்மிளா முதலானோர் நடித்தனர்.

சிவாஜி கணேசன், மனோரமா நடித்த ‘ஞானப்பறவை’ பொங்கலுக்குத்தான் வெளியானது. யாகவா முனிவரை கருவாக வைத்துக்கொண்டு, கதை உருவாக்கியிருந்தார் வியட்நாம் வீடு சுந்தரம். எம்.எஸ்.வி. இசையமைத்தார்.

கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில், ‘வா அருகில் வா’ திரைப்படம் 91ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. திரில்லர், சஸ்பென்ஸ், பேய்க்கதை என திகில் பரப்பியது.

அதுவரை விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த கேயார், ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தை இயக்கினார். சிவா, மோகினி முதலானோர் நடித்த காதல் படம் இது. இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டடித்தது.

சங்கிலி முருகன் தயாரிப்பில், பிரபு, கனகா நடித்த ‘கும்பக்கரை தங்கய்யா’ திரைப்படம் வெளியானது. கங்கை அமரன் இயக்க, இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டிசிட்டி என பறந்தடித்தன.


ரஜினி, கவுதமி, மது, சரண்ராஜ் முதலானோர் நடித்த ‘தர்மதுரை’ பொங்கல் நன்னாளில்தான் வெளியானது. 'தம்பிக்கு எந்த ஊரு’, ‘விடுதலை’, ‘மாவீரன்’ என எடுத்த ராஜசேகர் இயக்கினார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட் என்று சொல்லவே தேவையில்லை.
90ம் ஆண்டு, மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்து, மொத்த தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘புதுவசந்தம்’ இயக்குநர் விக்ரமன், 91ம் வருடம் பொங்கலுக்கு ‘பெரும்புள்ளி’ திரைப்படத்தை ரிலீஸ் செய்தார். ’என்னுயிர்த்தோழன்’ பாபு நடித்த படம் என்பதும் விக்ரமன் படம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை எகிறவைத்தது. ஆனால் படம் படுதோல்வியைச் சந்தித்தது.

ஆக, 91ம் ஆண்டின் பொங்கலுக்கு வந்த படங்களில், ரஜினியின் ‘தர்மதுரை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சந்தைக்கு வந்த கிளி’, ‘ஆணென்ன பெண்ணென்ன’, அண்ணன் என்ன தம்பி என்ன’, ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ என எல்லாப் பாடல்களும் செம ஹிட். அடுத்து, பிரபு நடித்து கங்கை அமரன் இயக்கிய ‘கும்பக்கரை தங்கய்யா’ திரைப்படம் மூன்று செண்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. 150 நாள், 200 நாள் என ஓடியது. ’பாட்டு உன்னை இழுக்குதா’, ’பூத்துப்பூத்து குலுங்குதடி பூவு’, ’தென்றல் காத்தே தென்றல் காத்தே’, ’கூடலூரு குண்டுமல்லி’, ’கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா’, ’கும்பம் கரை சேத்த தங்கய்யா’, ’என்னை ஒருவன் பாடச் சொன்னான்’ என அத்தனைப் பாடல்களும் பட்டையைக் கிளப்பின.

மூன்றாவதாக, கேயார் இயக்கத்தில் உருவான ‘ஈரமான ரோஜாவே’ மிகப்பெரிய ஹிட்டடித்தது. நூறுநாள் படமாக பல ஊர்களில் ஓடின. 11 படங்களில், இந்த மூன்று படங்கள் மட்டுமே, சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் வசூல் குவிக்கும் அளவுக்கும் ஓடின.

SCROLL FOR NEXT