'மாஸ்டர்' படத்துக்கான கொண்டாட்ட அறிவிப்பைக் கிண்டல் செய்த அஜித் ரசிகருக்கு, பதிலடிக் கொடுத்துள்ளார் திரையரங்க உரிமையாளர்.
சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் ஒன்று கோயம்பேடு ரோகிணி. இதில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும். மேலும், இதில் தான் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பார்கள். அந்தளவுக்குப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் அனைத்து செய்திருப்பார்கள்.
அவ்வாறு 'மாஸ்டர்' படத்துக்கு வித்தியாசமான கொண்டாட்டத்துக்கு ரோகிணி திரையரங்கம் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்போது படத்தின் வியாபாரம் அனைத்துமே முடிவடைந்துவிட்டது.
கோயம்பேடு ரோகிணியில் 'மாஸ்டர்' படத்துக்கான கொண்டாட்டம் தொடர்பாக உரிமையாளர் சரண்"'மாஸ்டர்' படத்துக்காக புதிய வடிவிலான கொண்டாட்டத்துக்குத் தயார் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இதை விளம்பரம் என்றோ, ஜால்ரோ என்றோ நினைக்கலாம். ஆனால், இறுதியில் அனைத்துமே விஜய்யின் மீதிருக்கும் அன்பினால் மட்டுமே" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
அதற்கு அஜித் ரசிகர் ஒருவர் கிண்டலாக "சில்லற இல்லபா" என்று குறிப்பிடப்பட்ட மீம் புகைப்படம் ஒன்றைப் பதிலாகத் தெரிவித்தார். உடனடியாக அவருக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் சரண் "நீங்கள் கொண்டாட்டத்தை வந்து பாருங்கள். தளபதி ரசிகர்கள் சில்லறையைச் சிதற விடுவார்கள். எடுத்துக்கோங்க" என்று பதிலளித்தார். இந்தப் பதில் அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளரைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.
தன் பதிவு சர்ச்சை ஆனதை தொடர்ந்து சரண் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நான் அளித்த பதில் அஜித் ரசிகர்களைக் காயப்படுத்துவதற்காக அல்ல. தவறாக பேசினார், அதற்குப் பதிலளித்தேன். அது அனைத்து அஜித் ரசிகர்களையும் சேராது. அஜித் மீது அவர்களுடைய ரசிகர்கள் மீதும் அளவு கடந்த மரியாதை உள்ளது. வழக்கம் போல் அஜித் படங்கள் அனைத்தும் ரோகிணி திரையரங்கில் வெளியிடப்பட்டுக் கொண்டாடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு ரோகிணி திரையரங்க உரிமையாளரின் பதிலடிக்கு, திருநெல்வேலி ராம் திரையரங்க நிர்வாகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், திரையரங்கில் எந்த நடிகருடைய படங்கள் வெளியானாலும் கொண்டாடப்பட்டுத் தான் வருகிறது. ஒரு படம் வெளியாகும் போது அதை விளம்பரப்படுத்தித் தான் ஆகவேண்டும். அதைக் கிண்டல் செய்பவர்களுக்கு அதே பாணியில் தான் பதிலளிக்கப்படும் என்றும் ராம் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.