குடும்பத்தினருடன் ஹரீஷ் பெரடி 
தமிழ் சினிமா

வில்லனாக நடிப்பது வரம், அதிர்ஷ்டம்!- ‘சேட்டா’ ஹரீஷ் பெரடி நேர்காணல்

மகராசன் மோகன்

‘‘இப்போ சபரிமலை சீசனாச்சா. கேரளாவுக்கு வர்ற தமிழ் ஆளுங்க எல்லாம் என்னைப் பார்த்து ‘சேட்டா.. சேட்டா’ன்னு அன்போடு நலம் விசாரிக்கும்போது உள்ளுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம். இந்த நடிப்புக்குத் தான் எவ்ளோ உயிர்!’’ - திரைப்படங்களில் பரவலாக வில்லன் அவதாரம் எடுக்கும் ஹரீஷ் பெரடி, ஒரு குழந்தையாய் குதூகலிக்கிறார். தமிழில் ‘ஆண்டவன் கட்டளை’, ‘கிடாரி’ வழியே அறிமுகம் பெற்றவர், ‘விக்ரம் வேதா’, ‘மெர்சல்’, ‘கைதி’, ‘தம்பி’ என தொடர்ந்து மிரட்டி வருகிறார். ‘டாணா’, ‘பல்லு படாம பாத்துக்க’, ‘கும்கி 2’, ‘சுல்தான்’ என இவரது அடுத்தடுத்த படங்கள் பட்டியல் நீள்கிறது. மலையாளம், தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார். அவருடன் உரையாடியதில் இருந்து..

உங்கள் சினிமா நடிப்புக்கு உரம், மேடை நாடக அனுபவம்தானே..

சுமார் 25 வருஷங்களுக்கு மேலாக நாடக மேடைதான் என் உலகம். 2000-ம்ஆண்டுக்கு பிறகுதான் சினிமாவுக்கு வந்தேன். அதுக்கு பிறகும்கூட நாடகத்தை விட்டதில்லை. கேரள மண்ணில் நாடகம் இன்றும்ஒரு முக்கியமான கலாச்சாரம். இன்னைக்கும் திருவிழாக்கள், வீட்டு விசேஷங்கள்னா நாடகம் இல்லாம இருக்காது. இங்கு நாடகத்துக்கும், கம்யூனிஸத்துக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. அந்த காலத்தில் ஒரே ஒரு நாடகப் பாட்டு ஏற்படுத்தின தாக்கத்தில் ஒரு அமைச்சரவையே உருவாகியிருக்கு.

நாடகப் பயிற்சி குறித்து..

சின்ன வயதில் 4 வருஷங்களுக்கு மேல் ஜெயப்பிரகாஷ் குளூர் நாடகக் குழுவில் சேர்ந்து பயிற்சி எடுத்திருக்கேன். 3,500 நாடக மேடைகள் கண்டாச்சு. ‘அப்பு உன்னி’ என்ற பெயரில் இரு கதாபாத்திரங்கள் மட்டுமே மேடையில் இருக்கிற 2 மணிநேர நாடக நடிப்புதான் என்னை பரவலாகமக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. சிவாஜிகணேசன் போன்ற மாபெரும் நடிகர்களை நாடக உலகம்தான் நமக்கு அளித்தது. அவரது பாதிப்பு இல்லாமல் எனக்கெல்லாம் எதுவுமே இல்லை.

தமிழுக்கு வந்தது எப்படி?

மலையாளத்தில் வெளிவந்த ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ திரைப்படம்தான் எனக்கு தமிழிலும், மலையாளத்திலும் மிகப் பெரியவாய்ப்புகள் உருவாக காரணமாக அமைந்தது. அதை பார்த்துட்டுதான் ‘கிடாரி’ படத்துக்காக சசிகுமாரும், ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்காக மணிகண்டனும் அழைத்தனர். ‘ஆண்டவன் கட்டளை’ பெரிய அளவில் கவனத்தை கொடுத்தது. ‘விக்ரம் வேதா’ படத்துக்கு விஜய்சேதுபதி பரிந்துரைத்தார்.

தமிழில் உங்கள் கதாபாத்திரங்கள் அரக்க குணம் கொண்டதாகவே இருக்கிறதே..

படம், கதாபாத்திரம் என்பது நான் தேர்வு செய்வது இல்லை. ஒரு கதை,திரைக்கதையை உருவாக்கும் இயக்குநர்கள் ‘இந்த பாத்திரத்துக்கு சேட்டா ஹரீஷ் பொருத்தமா இருப்பார்’ என்று ஒரு வரைபடமாக்கி, கொண்டு வர்றாங்க. எனக்கும் அது பொருந்திவிடுகிறது.

தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடிக்க ஏதாவது காரணம் உண்டா?

படத்துக்கு ஹீரோ என்பவர் ஒரு ஃபேன்டஸிக்குதான். அதாவது, ‘இப்படி ஒருவர் நிஜத்தில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்!’ என்று நினைக்க வைப்பார்.. அவ்ளோதான். மற்றபடி, வில்லன்தான் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பவர். அவரது ரியாக்‌ஷன்தான் இங்கு நடைமுறை வாழ்க்கையில் உள்ளது. வில்லன் பாவனைகள் ரியலான பாவனை. அதை நான் செய்கிறேன். ஒவ்வொரு நடிகருமே வில்லனாக இருந்து ஹீரோவாக மாற வேண்டும் என்பது என் எண்ணம். எனவே, வில்லனாக நடிப்பது எனக்கு கிடைத்த வரம், என் அதிர்ஷ்டம். அதை நாடகக் கலை வழியாக பெற்றது மிக்க மகிழ்ச்சி.

‘நடிப்பு அனுபவமே வேண்டாம்’ என்று புதுமுகங்களை தேர்வு செய்து சில இயக்குநர்கள் நடிக்க வைக்கிறார்களே?

நடிக்கவே தெரியாதவர்களை அழைத்து வந்து நடிக்க வைப்பதும் ஒருவித கலைதான். ஆனால், உள்ளே வந்த பிறகு, என்ன செய்ய வேண்டும்.. எப்படி நடிக்க வேண்டும் என்று அவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படும். அதுவழியே அவர்களும் நடிப்புக்குள் நுழைவார்கள். நடிப்பில் எதுவுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி..

பிறந்து, வளர்ந்தது கேரள மாநிலம் கோழிக்கோடு. இப்போ கொச்சியில் இருக்கேன். மனைவி கிளாஸிகல் நடனத்தில் அத்துபடி. வீட்டுக்கு பக்கத்துலயே நடன வகுப்பு நடத்துறாங்க. ரெண்டு பசங்க. மூத்தவன் படிச்சுட்டு ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறான். சின்னவன் 9-ம் வகுப்பு படிக்கிறான்.

SCROLL FOR NEXT