அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மிண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். 'வலிமை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. இதில் ஒரு சண்டைக் காட்சியையும் மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்தது படக்குழு. இந்தப் படத்தில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதில் நாயகியாக யாமி கவுதம் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித்துடன் பிரசன்னா நடித்து வருவதாகப் பலரும் தகவலைப் பரப்பி வருகிறார்கள். ஏனென்றால், ட்விட்டர் தளத்தில் பிரசன்னாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ”'வலிமை' படத்தில் பிரசன்னா. பதிலளியுங்கள் அண்ணா” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு "இல்லை ப்ரோ. தகவலுக்காகக் காத்திருக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார் பிரசன்னா.
இந்த ட்வீட்டை வைத்துக் கொண்டு, பிரசன்னா நடித்து வருவது உறுதி என்கிறார்கள். ஏனென்றால், அஜித்துடன் நடிப்பவர்கள் யாருமே அதைப் பற்றிய தகவலை வெளியே சொல்லக் கூடாது என்று கூறியிருப்பதால் அவர் அதற்கு சரியாகப் பதிலளிக்கவில்லை என்கிறார்கள்.
'வலிமை' படத்தில் யுவன் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருவதையும், படம் 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.