'பொம்மை' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் எடிட்டிங் பணிகளை முடித்துவிட்டு, படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் எடிட்டர் ஆண்டனி.
'மான்ஸ்டர்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வரும் படம் 'பொம்மை'. ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
'பொம்மை' எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தையும் ஒரே கட்டமாக முடித்தது படக்குழு. புத்தாண்டை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டது. இதனிடையே இந்தப் படத்தின் எடிட்டராக ஆண்டனி பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடிட்டிங் பணிகளை முடித்துவிட்டு, ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில், ”’பொம்மை’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எடிட் செய்து முடித்தேன். மிக அற்புதமான படம். இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
காதல் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். காதலர் தினத்தில் 'பொம்மை' திரைக்கு வரவுள்ளது.