தமிழ் சினிமா

ஜல்லிக்கட்டுப் போராட்டப் புகைப்படம் பகிர்வு: சாடிய ரசிகர்கள்; கொந்தளித்த ஜூலி

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுப் போராட்டம் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜூலி

2017-ம் ஆண்டு இந்திய அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஜனவரி 8-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள். மேலும், இந்தப் போராட்டத்தின் முடிவும் சர்ச்சைக்குள்ளானது.

இந்தப் போராட்டத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததன் மூலம் பிரபலமானவர் ஜூலி. இதில் ஜூலியின் ஆவேசமான பேச்சுகள் இணையத்தில் பெரும் வைரலாயின. அப்போது பிரபலமானவர், அதே ஆண்டு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகளால் கடும் எதிர்வினைக்கு ஆளானார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கிடைத்த பெயர் அப்படியே பிக் பாஸ் சர்ச்சையால் மங்கிப் போனது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 17) ஜூலி தனது ட்விட்டர் பதிவில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றினைப் பதிவிட்டார். அதற்கு அவரது ட்விட்டர் தளத்தைப் பின்தொடர்பவர்கள், கடும் எதிர்வினையாற்றினார்கள். "உங்களைத் தமிழ்ப் போராளி என்று நம்பி ஏமாந்த தருணம்" என்று ஒருவர் கூறிய கருத்துக்கு, "பாவம் உண்மை ஒரு நாள் வெல்லும் நண்பா. கண்ணால் பார்ப்பது எல்லாம் உண்மை அல்ல தோழரே" என்று பதிலளித்தார் ஜூலி. பலரும் உங்களுடைய புகைப்படத்தை, எங்களது சமூக வலைதளத்தில் பதிவேற்றி ஏமாந்த தருணம் என்று தெரிவித்தார்கள்.

பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஜூலி தனது ட்விட்டர் பதிவில், "உங்கள் அலுவலக மேலதிகாரியைப் பிடிக்கவில்லை என்றால் உங்களில் எத்தனை பேர் அதை அவரிடம் நேரில் சொல்வீர்கள்? நீங்கள் அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனென்றால் வேலை முக்கியம். அப்படிச் சொல்லாமல் இருப்பதற்குப் பேர்தான் நடிப்பு அல்லது பிழைப்பதற்கான உத்தி.

யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கு யாருமே எல்லோருக்கும் நல்லவராக இருக்க இயலாது. நல்லதும் தீதும் சேர்ந்தே நிறைந்த மனிதராக இருங்கள். எல்லா வெறுப்பையும் கடந்து மேலெழும்புங்கள்" என்று தெரிவித்தார் ஜூலி. இந்தப் பதிவுக்குப் பலரும் அவரது பிக் பாஸ் நிகழ்ச்சி செயல்பாடுகளை முன்வைத்துச் சாடத் தொடங்கினார்கள்.

அதில் ஒருவர், "பிழைப்புக்காக என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட அதிலும் ஒரு ஒழுங்கு வேண்டுமல்லவா? அடுத்தவரின் காலை வாராமல் அடுத்தவரைப் பாதிக்காமல் பிழைக்க வேண்டும்." என்று கருத்து தெரிவித்தார்.

அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "இங்கு யாரும் யாருடைய காலையும் வாரவில்லை. டிவியில் ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் நிகழ்ச்சியினை வைத்து நீங்கள் ஒருவரின் குணத்தைத் தீர்மானிப்பீர்கள் என்றால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் கண்டது உண்மையல்ல. வெளியே வாருங்கள். நீங்கள் பார்க்கும் நபர்கள் உங்களின் பார்வையை மாற்றுவார்கள்" என்று தெரிவித்துள்ளார் ஜூலி

SCROLL FOR NEXT