வரி ஏய்ப்பு குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுகிறது, சட்டப்படி எதிர்கொள்வேன் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையை சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான ராஷ்மிகா தற்போது தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையில் உள்ள ராஷ்மிகாவின் வீடு மற்றும் திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். பெங்களூரு மண்டல அலுவலகத்திலிருந்து 3 கார்களில் வந்த 15 அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர்.
படப்பிடிப்பிற்காக ராஷ்மிகா வெளியூர் சென்றிருந்ததால் அவரது பெற்றோர் மட்டுமே வீட்டிலிருந்தனர். இந்த சோதனையின்போது ராஷ்மிகாவின் பெற்றோரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ராஷ்மிகா கூறுகையில், “நான் அதிக ஊதியம் பெறுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. நான் இப்போது தான் வளர்ந்துவரும் நடிகை. அதிக செலவில் தயாராகும் படங்களில் நான் இன்னும் நடிக்கவில்லை. எனினும் வரி ஏய்ப்பு போன்ற தவறான செய்திகள் என்னைப் பற்றிப் பரப்பப்படுகின்றன. வருமான வரித் துறையை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்றார்.