வி.ராம்ஜி
93ம் ஆண்டு பொங்கல் முக்கியமான பொங்கலாக அமைந்தது. பாலசந்தரும் பாரதிராஜாவும் இயக்கிய படங்கள் பொங்கலுக்கு வந்தன. அதேபோல், சந்தான பாரதி என்று இணைந்து ஒருகாலத்தில் இயக்கிய சந்தானபாரதி இயக்கிய படமும் பி.வாசு இயக்கிய படமும் இதே பொங்கலுக்கு வெளியானது.
விஜயகாந்தின் படமும் பொங்கலுக்கு வெளியானது. விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்த அருண்பாண்டியன் படமும் அன்றைய நாளில் வெளியானது. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா இயக்கிய படமும் வெளியானது.
1993ம் ஆண்டு பொங்கலுக்கு இயக்குநர் சிகரம் பாலசந்தரின் ‘ஜாதிமல்லி’ திரைப்படம் வெளியானது. குஷ்பு, முகேஷ், வினித், யுவராணி முதலானோர் நடித்திருந்தனர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ‘கேப்டன் மகள்’ படமும் பொங்கலுக்குத்தான் வெளியானது. குஷ்பு நடித்திருந்தார். ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ திரைப்படமும் பொங்கல் நன்னாளில்தான் ரிலீசானது. இதில், நிழல்கள் ரவி, ரேவதி, ரோகிணி, அரவிந்த்சாமி முதலானோர் நடித்திருந்தனர்.
இதேபோல், அதே வருடத்தில், பொங்கலுக்கு கங்கை அமரன் இயக்கத்தில் விஜயகாந்த், கனகா நடித்த ‘கோயில்காளை’, பி.வாசு இயக்கி, சத்யராஜ், சுகன்யா நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’திரைப்படமும், சந்தானபாரதி இயக்கி, பிரபு, சுகன்யா நடித்த ‘சின்ன மாப்ளே’ திரைப்படமும் வெளியானது.
சரத்குமார் நடித்த ‘ஆதித்யன்’ திரைப்படமும் சரவணன், செல்வா நடித்த ‘மாமியார் வீடு’ திரைப்படமும் அருண்பாண்டியன் நடித்த ‘முற்றுகை’யும் 93ம் ஆண்டு பொங்கலுக்குத்தான் ரிலீசாகின.
ஆக, ‘கேப்டன் மகள்’, ‘ஜாதிமல்லி’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘சின்ன மாப்ளே’, ‘கோயில் காளை’, ‘மறுபடியும்’, ‘ஆதித்யன்’, ‘முற்றுகை’, ‘மாமியார் வீடு’ என ஒன்பது படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. இதில், ஐந்து படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இதில் சாதி மதமற்ற காதலைச் சொன்ன ‘ஜாதிமல்லி’ ஏனோ ரசிகர்களைக் கவரவில்லை. த்ரில்லர் சஸ்பென்ஸுடன் வந்த ‘கேப்டன் மகள்’ பெரிதாகப் போகவில்லை. ‘மாமியார்வீடு’, ‘ஆதித்யன்’, ‘முற்றுகை’ ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின.
சந்தானபாரதி இயக்கத்தில் பிரபு, சுகன்யா நடித்த ‘சின்ன மாப்ளே’ கதையாலும் கிரேஸி மோகனின் காமெடியாலும் ரசிக்கப்பட்டது. இளையராஜாவின் எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.
இதேபோல், விஜயகாந்த், கனகா, சுஜாதா நடித்து, கங்கை அமரன் இயக்கிய ‘கோயில்காளை’யில் இளையராஜாவின் இசையில், அனைத்துப் பாடல்களும் ஹிட்டாயிற்று. விஜயகாந்த் மார்க்கெட், கங்கை அமரனின் இயக்கம், இளையராஜாவின் இசை என எல்லாமே அமைந்து, சி செண்டரில் படம் கலெக்ஷனைக் கொடுத்தது. பி செண்டரிலும் ஹவுஸ்புல்லாக ஓடியது.
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த ‘மறுபடியும்’, ஏ செண்டர் என்று சொல்லப்படும் நகரங்களில் நல்ல வெற்றியைப் பெற்றது. ரோகிணியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. அரவிந்த்சாமியின் நடிப்பு அவருக்கே புதிதுதான். நிழல்கள் ரவியும் ரேவதியும் பண்பட்ட நடிப்பைக் கொடுத்திருந்தார்கள். இளையராஜாவின் இசை, வழக்கம்போல், பாலுமகேந்திராவின் இயக்கத்துக்கு பெரிதும் துணையாக, பலமாக நின்றது.
இந்த ஒன்பது படங்களில், ஏ, பி, சி என மூன்று செண்டர்களிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் ‘வால்டர் வெற்றிவேல்’தான். போலீஸ் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு படமெடுக்கும் போது, பொதுவாகவே அந்த நடிகருக்கு அது ஹிட் படமாக அமைந்துவிடும் என்பார்கள். அந்த வகையில், சத்யராஜ், ஏற்கெனவே ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த படம் இது.
93ம் ஆண்டு, பி.வாசுவின் இயக்கத்தில், சத்யராஜ், சுகன்யா, விஜயகுமார், கவுண்டமணி முதலானோர் நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இளையராஜா இசையில் இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘சின்னராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது’ என்ற பாடலுக்கு சுகன்யாவுடன் பிரபுதேவாவும் சேர்ந்து ஆடினார். அதற்கு முன்னர்தான் ‘சூரியன்’ படத்தில் ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாடலுக்கு நடனமாடினார் பிரபுதேவா. இதேபோல், இந்தப் படம் பொங்கலுக்கு வந்தது. இதன் பின்னர் ஜூலையில் வந்த ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ படத்தில், ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்ற பாடலுக்கு ஆடினார். ஆக, பிரபுதேவாவின் திரைப்பயணத்தில், ‘சின்னராசாவே’ பாடலும் ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படமும் மறக்கமுடியாத படமாக அமைந்தன.
காவல்துறைக்குக் கண்ணியம் சேர்க்கும் வகையிலான கதையும் தெளிவான திரைக்கதையும் சத்யராஜின் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. ‘மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா’ பாடல், மிகச்சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருந்தது.
93ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களில், பி.வாசு - சத்யராஜ் ஜோடியின் ‘வால்டர் வெற்றிவேல்’முதலிடம் பிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
படம் வெளியாகி, 27 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் மக்கள் மனங்களில், கம்பீரமாக நிற்கிறார் ‘வால்டர் வெற்றிவேல்’.
வால்டருக்கும் அவரின் குழுவுக்கும் ஒரு சல்யூட்!