தமிழ் சினிமா

ப்ரியா பவானி சங்கரைக் காதலிக்கிறேனா? - எஸ்.ஜே.சூர்யா காட்டம்

செய்திப்பிரிவு

ப்ரியா பவானி சங்கரைக் காதலிப்பதாகப் பரவிய வதந்திக்கு எஸ்.ஜே.சூர்யா காட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் நாயகன் - நாயகி இருவரும் 2-3 படங்களில் இணைந்து நடித்தால் உடனே காதல் என்று செய்திகள் பரவத் தொடங்கிவிடும். அந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கரும் குறித்தும் வதந்திகள் பரவின.

இருவருமே நெல்சன் இயக்கத்தில் வெளியான 'மான்ஸ்டர்' படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் 'பொம்மை' படத்திலும் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரண்டாவது படத்தில் இணைந்து நடிப்பதால், இருவரும் காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் பரவின. அதிலும் சிலர், ப்ரியா பவானி சங்கரை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால், எஸ்.ஜே.சூர்யாவிடமும் சம்மதம் வாங்க வேண்டியுள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.

தற்போது பல்வேறு முன்னணி படங்களின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருவதால், இந்தச் செய்தியும் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்தச் செய்தி தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில், "பிரியா பவானி சங்கரிடம் நான் என் காதலைத் தெரிவித்ததாகவும் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் யாரோ ஒரு முட்டாள் தவறான தகவலைப் பரப்பிவிட்டான்.

‘மான்ஸ்டர்’ படத்திலிருந்து அவர் எனக்கு மிகச்சிறந்த தோழி. அவர் ஒரு நல்ல நடிகையும் கூட. அவ்வளவுதான். தயவு செய்து அடிப்படையற்ற தவறான தகவல்களைப் பரப்பி எரிச்சலைக் கிளப்பாதீர்கள். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT