தமிழ் சினிமா

'கர்ணன்' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி ப்ரியா ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி ப்ரியா நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் தனுஷ். இந்தப் படத்தையும் 'அசுரன்' படத்தைத் தயாரித்த தாணு தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் தனுஷிடன் நடித்து வந்தார்கள். தற்போது முக்கியமான கதாபாத்திரத்தில் ஒன்றில் லட்சுமி ப்ரியாவும் நடித்து வருகிறார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் உறுதிச் செய்துள்ளார்.

'கர்ணன்' எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் திருநெல்வேலியிலேயே முடித்துவிட்டு, சென்னை திரும்ப படக்குழு முடிவு செய்துள்ளது.

வஸந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் பிராதன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லட்சுமி ப்ரியா. இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றிருந்தாலும், இன்னும் தமிழகத்தில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT