விஜய் படம் குறித்த பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு தன் பேச்சில் முற்றுப்புள்ளி வைத்தார் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால், 100 நாட்கள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் 100-வது நாள் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த விழாவில் நடிகர் பவன் பேசும்போது, "ஒரு படத்துக்கு 100-வது நாள் விழா என்பது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதற்கு முன்பு 'குருவி' படத்தின் 150-வது நாள் விழாவில்தான் கலந்து கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்று பேசினார். அப்போது மேடையில் இருந்தவர்கள் மத்தியில் பயங்கர சிரிப்பலை எழுந்தது.
இறுதியாக தனுஷ் பேசும்போது, தன் பேச்சில் தொடக்கத்திலேயே, " 'அசுரன்' படத்தின் 100-வது நாள் விழா நடைபெறுவதில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான விழாவில் நாம் பேசுவது மட்டும்தான் நம்முடைய கையில் இருக்கும். எது சரியோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். எது சரியில்லையோ அதை விட்டுவிடுங்கள்" என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.