பத்ரி இயக்கத்தில் ரியோ நடித்துள்ள படத்துக்கு 'பிளான் பண்ணி பண்ணனும்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு,
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். அதன் மூலம் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜேஷ் குமார் மற்றும் சிந்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பால சரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடித்தது படக்குழு. தற்போது இந்தப் படத்துக்கு 'பிளான் பண்ணி பண்ணனும்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
வடிவேலுவின் காமெடியில் பிரபலமான வசனத்தைப் படத்தின் தலைப்பாகப் படக்குழு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.