தமிழ் சினிமா

'அசுரன்' 100-வது நாள்: கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள் - தனுஷ் பங்கேற்பு

செய்திப்பிரிவு

'அசுரன்' படத்தின் 100-வது நாள் விழாவை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸான படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் தொடர்ச்சியாகத் திரையிடப்பட்டு வந்தது. இதில் 100-வது நாளைக் கடந்தது. இதனைக் கொண்டாடும் வகையில் சிறப்புக் காட்சி ஒன்றுக்குத் திரையரங்க நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதில் கலந்து கொள்ளப் படக்குழுவினருக்கும் அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பினை ஏற்று தனுஷ், தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன், கென் கருணாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இங்கு கேக் வெட்டி சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதனை தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அமர்ந்து ரசித்தனர்.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'பட்டாஸ்' நாளை மறுநாள் (15-ம் தேதி) வெளியாகவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT