தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒரு நாள் முன்பாக ஜனவரி 15-ம் தேதி 'பட்டாஸ்' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தனுஷ், சினேகா நடிப்பில் 'பட்டாஸ்' படத்தை இயக்கியுள்ளார். நாசர், முனீஷ்காந்த், மெஹ்ரின் ப்ரிஸடா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஜனவரி 16-ம் தேதி வெளியீட்டை மாற்றி, ஒரு நாள் முன்பாக ஜனவரி 15-ம் தேதி 'பட்டாஸ்' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
'பட்டாஸ்' படத்துக்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் தனுஷ். இதன் இறுதிக்கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.