தமிழ் சினிமா

’தர்பார்’ வெளியீடு: இந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'தர்பார்' படத்தை, ரசிகர்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளனர்.

கடந்தாண்டு பொங்கலுக்கு ரஜினி நடித்த 'பேட்ட' படம் வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு 'தர்பார்' படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், ஏ.ஆர்.முருகதாஸுடன் ரஜினி இணைந்துள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழக அரசு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதியளித்ததால், தமிழகம் முழுக்க அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி தொடங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகள், கேக் வெட்டி, பொங்கல் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மும்பையில் உள்ள திரையரங்கில், வாசலில் கரும்பு கட்டி பொங்கல் வைத்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். சென்னையில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன், லாரன்ஸ், அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு கழித்தார்கள்.

மேலும், ரசிகர்களுடன் இயக்குநர் ஷங்கர், லிங்குசாமி, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் ரசிகர்களோடு படம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 'தர்பார்' படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார்.

'தர்பார்' படத்தின் முதல் காட்சி முடிவடைந்து, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும், ரஜினியின் அறிமுகக் காட்சி, இடைவேளை காட்சி, க்ளைமாக்ஸ் காட்சி எனப் புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT