கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
'திருடன் போலீஸ்' மற்றும் 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடித்த 'கண்ணாடி' படத்தை இயக்கினார். இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இதன் தெலுங்குப் பதிப்பான 'Ninu Veedani Needanu Nene' பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
'கண்ணாடி' வெளியாகாத காரணத்தால் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கார்த்திக் ராஜு. முழுக்க நாயகியை மையப்படுத்தி உருவாகும் இந்தக் கதையில் ரெஜினா ஒப்பந்தமானார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.
ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் கதையாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 13-ம் தேதி முதல் குற்றாலத்தில் தொடங்குகிறது.
தங்களது முதல் தயாரிப்பு குறித்து ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ராஜ் சேகர் வர்மா கூறுகையில், "வித்தியாசமான தளத்தில், வித்தியாசமான பாணியில் பல இடங்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக கார்த்திக் ராஜுவின் கதை இருந்தது.
சமீபமாக நாயகியை மையமாக வைத்து நல்ல அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் ஜெயித்து வருகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தைத் தயாரிப்பதில் மகிழ்ச்சி. த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இதில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது இவர் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கப் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.