'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதன் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
யுவன் இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியது. அதில் சுதீப், அரவிந்த்சாமி உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.
அதற்குள், சிம்புவுக்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. இதைப் பலரும் பகிர்ந்து வந்தனர். ஆனால், இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு சுதீப் தனது ட்விட்டர் பதிவில், ‘தவறான செய்தி’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிம்புவுக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அரவிந்த்சாமியும் சிம்புவும் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் சகோதரர்களாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 20-ம் தேதி 'மாநாடு' படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.