ரியோ ராஜ் - நம்பீசன் நடித்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். அதன்மூலம் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோ சார்பில் ராஜேஷ் குமார், சிந்தன் இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பால சரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்கதுரை, மதுரை சுஜாதா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி, கேரளாவில் இடுக்கி மற்றும் வாகமன், சைனாவில் கேங்டாக் மற்றும் குபுப் ஆகிய இடங்களிலும் படம் பிடித்துள்ளனர். படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சமாக, குறிப்பிட்ட காட்சிக்காக 125 தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
படப்பிடிப்பைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கியுள்ளனர். விரைவில் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளது.
பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.