‘மிரட்டல்’ படத்துக்காக அஜித் சிக்ஸ் பேக் வைப்பதாகச் சொன்னார் எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
தணிக்கைப் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் முடிந்து, ஜனவரி 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே, படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தப் பேட்டிகளில், ஏ.ஆர்.முருகதாஸின் முதல் பட ஹீரோவான அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அஜித்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்த ‘மிரட்டல்’ படம் ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த ஏ.ஆர்.முருகதாஸ், “ ‘மிரட்டல்’ படம் எடுக்காததற்குக் காரணம், நாங்கள் பட வேலைகளை ஆரம்பித்த பின் தயாரிப்பாளருக்கும் அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள்தான். ஆனால், அஜித் ‘மிரட்டல்’ கதையைக் கேட்டதும், உடனே இந்தப் படத்துக்காகத்தான் சிக்ஸ் பேக் வைப்பேன் என்று சொன்னார்.
அவர் சொல்லும்வரை இந்த விஷயம் படத்தில் இல்லை. ‘ஓ... நாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் நன்றாக இருக்குமே...’ என்று அவர் சொன்ன பிறகுதான் நானும் யோசிக்க ஆரம்பித்தேன். எங்களால் ‘மிரட்டல்’ படத்தை எடுக்க முடியவில்லை என்றாலும், அவர் சொன்ன யோசனையை வைத்து சூர்யா, ஆமிர் கான் போன்ற நட்சத்திரங்களிடம் அந்தக் கதாபாத்திரத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கச் சொன்னேன்” எனத் தெரிவித்துள்ளார்.
'மிரட்டல்' கதைதான் பின்பு, சூர்யா நடிப்பில் 'கஜினி' படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.