கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைத்துள்ளது ‘அகரம்’ என சூர்யா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அகரம் அறக்கட்டளை சார்பாக நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜனவரி 5) நடைபெற்றது. பேராசிரியர் ச.மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான 'உலகம் பிறந்தது நமக்காக' ஆகிய இரண்டு நூல்களையும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இந்த விழாவில், அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, பேராசிரியர் ச.மாடசாமி, ராம்ராஜ் காட்டன் நாகராஜ், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் காளீஸ்வரன் உள்ளிட்ட பலருடன், அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சூர்யா பேசியதாவது:
“கடந்த 10 ஆண்டுகளில் 3000 மாணவர்களைப் படிக்க வைத்துள்ளது ‘அகரம்’. இதன் பின்னணியில், எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு உள்ளது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி குறித்த நிகழ்வு என்றதும் உடனே கலந்து கொள்வதாகச் சொல்லி, இன்று இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களை இணைத்து, அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ‘இணை’ எனும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது அகரம் அறக்கட்டளை. இந்த முயற்சிக்கு, அரசுப் பள்ளி சார்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு, அகரம் அறக்கட்டளை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும், எந்தவித தொய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் நாகராஜுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
இன்று வெளியான இந்த இரு புத்தகங்களும், தனித்தன்மை வாய்ந்தவை. அகரம், இந்த இரு புத்தகங்களையும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. எந்த ஒரு சூழ்நிலையையும் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாகச் செயல்படுவதற்கும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘அகரம்’ மூலம் என் தம்பி, தங்கைகளுக்கு கல்வியுதவி அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். நாம் அனைவரும்தான் ‘அகரம்’.”
இவ்வாறு சூர்யா பேசினார்.
இந்த விழாவில்தான் தடைகளைத் தாண்டி வளர்ந்த கதையை மாணவி காயத்ரி மேடையில் பகிர்ந்தபோது, கண் கலங்கி அழுதார் சூர்யா. இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது.