மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘கர்ணன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் என இரு படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார் தனுஷ். இதில், ‘பட்டாஸ்’ வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முழுவதும் லண்டனில் நடைபெற்ற கார்த்திக் சுப்புராஜ் படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டும் இந்தியாவில் படமாக்கப்பட்டன. 10 நாட்கள் நடைபெற்ற பேட்ச் ஒர்க் படப்பிடிப்பை, சமீபத்தில் முடித்துக் கொடுத்தார் தனுஷ். தற்போது அதன் இறுதிக்கட்டப் பணிகளும் தொடங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், திடீரென கடந்த 3-ம் தேதி திருநெல்வேலியில் படப்பிடிப்பு தொடங்கியதாகத் தகவல் வெளியானது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அத்துடன், படத்தின் தலைப்பு ‘கர்ணன்’ என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். “அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல... வெற்றியையும் தருபவர்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்.தாணு, படத்தின் பூஜை புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ராஜிஷா விஜயன் நடிக்கிறார். மலையாள நடிகர் லால், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.