அப்பா கையால் சிறந்த அறிமுக இயக்குநர் விருதுக் கொடுக்கப்பட்டதால், மிகவும் நெகிழ்ந்து பெற்றுக் கொண்டார் அருண்ராஜா காமராஜ்
ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாகத் தமிழ் திரையுலகிற்கு என்று பிரத்தியேகமாக விருது வழங்கும் விழாவை தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்று (ஜனவரி 4) பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவினை அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இந்த விழாவில் 'கனா' படத்துக்காகச் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை வென்றார் அருண்ராஜா காமராஜ். இதன் போட்டியாளர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டு, இறுதியில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டார்.
அப்போது மேடையில் விருது அளிக்க யாருமே இல்லாததால், கொஞ்சம் குழப்பத்துடனேயே ஏறினார். இந்த விருது தொடர்பாக அருண்ராஜா காமராஜ் பேசும் போது "இதுவரைக்கும் இந்தப் படத்துக்கு எவ்வளவு விருதுகள் வாங்கினேன் என்று தெரியவில்லை. 25 விருதுகளுக்கு மேல் வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன்" என சுறுக்கமாக முடித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உங்களுக்கு விருதினை அளிக்க ஒரு முக்கியமான நபர் விருதுடன் இப்போது மேடைக்கு வருவார் என அறிவித்தார் அர்ச்சனா. பலரும் யாராக இருக்கும் என எதிர்நோக்கிய போது, அவரது அப்பா கையில் விருதுடன் மேடைக்கு நடந்துவந்தார். இதனைப் பார்த்தவுடன் மிகவும் நெகிழ்ச்சியடைந்தார் அருண்ராஜா காமராஜ்.
அருண்ராஜா காமராஜ் தந்தை பேசும் போது, "’நெருப்புடா’ பாடல் வெளியானவுடனே, என் மகன் பெரியளவுக்கு வருவான் என்ற நம்பிக்கை வந்தது. 'கவலைப்படாதீங்க அப்பா உங்க பையனை நான் பெரிய ஆளாக்குறேன்' என்று சிவகார்த்திகேயன் சொன்னார். அது போலவே நடந்துவிட்டது. இன்னும் பெரிய இடத்துக்குப் போவார்.
என் மகனுடன் இருக்கும் நண்பர்கள் இப்போது வரை ஒற்றுமையாக இருப்பது ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் தான் இவருடைய அப்பாவா என்று என்னை ஒரு திரையரங்க முதலாளி, என்னை அவருடைய திரையரங்கிற்கு கூட்டிட்டு போனது எல்லாம் நடந்தது" என்று பேசினார்.
அருண்ராஜா காமராஜ் அப்பா மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, கீழே இருந்த அருண்ராஜாவின் மனைவி அழுதுவிட்டார். அப்போது அவரை மைக் கொடுக்கப்பட்டது. "அவருடைய வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருந்தாலும், அவரது நண்பர்கள் தான் முக்கியக் காரணம்" என்று கண் கலங்கியபடியே கூறினார். இறுதியில் மேடை இறங்கும் முன், தன் அப்பாவின் கால் அருகே விருதினை வைத்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய போது அங்கிருப்பவர்கள் கைத்தட்டி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்