தமிழ் சினிமா

'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக்

செய்திப்பிரிவு

'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக்கை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

மேலும், இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறார் பார்த்திபன். நேற்று (ஜனவரி 4) சென்னையில் நடைபெற்ற ஜீ தமிழ் விருதுகள் விழாவில் சிறந்த திரைக்கதை என்ற பிரிவில் 'ஒத்த செருப்பு' படத்துக்கு விருது கிடைத்தது. இதே விழாவில் 'பேட்ட' படத்துக்காகச் சிறந்த வில்லன் என்ற விருதைப் பெற்றார் நவாசுதீன் சித்திக்.

ஜீ தமிழ் விருதினைப் பெறுவதற்காகச் சென்னை வந்தார் நவாசுதீன் சித்திக். நேற்று விருதினை வாங்கிவிட்டு சென்னையிலேயே தங்கியுள்ளார். அவரை இன்று (ஜனவரி 5) காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பார்த்திபன்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் "Os7-ஐ இந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது." என்று பதிவிட்டு, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன். இதன் மூலம் 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT