தமிழ் சினிமா

சீரியலில் காதலிக்க நேரம் இருக்கு! - சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா நேர்காணல்

செய்திப்பிரிவு

மஹா

கிருஷ்ணா - சாயா சிங் தம்பதியர், ‘ஆனந்த புரத்து வீடு’ திரைப்படத்துக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரன்’ நெடுந்தொடருக்காக இணைந்து நடித்து வருகின்றனர். காதல், சென்டிமென்ட், திரில்லர் கலந்த கலவையாக வரும் இத்தொடரில் சக்திவேல் - திவ்யாவாக நடிக்கின்றனர். இதுபற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார் கிருஷ்ணா..

நீங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் தொடரின் கதைக் களம் குறித்து..

கதைப்படி அவர்தான் என்னை காதலிக்கிறார். நான் இன்னும் என் காதலை நேரடியாக திவ்யாவிடம் சொல்லவில்லை. குடும்பம், வம்பு, கோபம் என பொதுவான கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு, சென்டிமென்ட் பின்னணியில் திரில்லராக நகரும் தொடர் இது.

கணவன் - மனைவி இருவரும் ஒரு தொடரில் காதலர்களாக இணைந்து நடிப்பது எளிதுதானே..?

இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதால், பிரச்சினை இருப்பதில்லை. ‘காட்சிகள் இப்படி இருக்கலாம்.. அப்படி இருக்கலாம்..’ என்று நாங்கள் இயல்பாக பேசிக்கொண்டு இருப்போம். எங்களிடம் சொல்லாமலேயே அதை காட்சிப்படுத்திவிடுவார் இயக்குநர் ராஜு பிரசாத். அது எதார்த்தமாக இருப்பதோடு, சிறப்பாகவும் அமைந்துவிடும். முன்பெல்லாம் நானும், சாயாவும் பார்த்து, பேசிக்கொள்வதே குறைவு. இப்போது காதலிக்க, அன்பை பகிர்ந்துக்க நிறைய நேரம் கிடைக்கிறது.

‘தெய்வ மகள்’ தொடரின்போது, உங்களுக்கும் வாணி போஜனுக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் வெளியானது பற்றி..

சுமார் 5 ஆண்டுகாலம் இணைந்து ஒரு தொடரில் நடிக்கிறோம். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தாலும், மற்றவர்கள் பார்வையில் வித்தியாசமான கண்ணோட்டம் ஏற்படுவது இயல்புதான். வீணாக பரப்பப்பட்ட செய்திக்கு பதில் கூற அவசியம் இல்லை என்று விட்டுவிட்டோம்.

சாயாசிங்குக்கு முன்பு திவ்யாவாக நடித்த சரண்யா ஏன் விலகினார்?

‘ரன்’ தொடரில் நடித்தபோது, வேறொரு தொடரில் இருந்து அவருக்கு வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க அவரும் ஆர்வமாக இருந்தார். தயாரிப்பு மற்றும் சேனல் தரப்பிடம் முறையாக பேசிவிட்டுதான் இதில் இருந்து விலகினார். மற்றபடி பிரச்சினை எதுவும் இல்லை.

திடீரென ஒருவர் இப்படி மாறுவதால், அந்த கதாபாத்திரத்துக்கு மற்றொரு நபர் உயிர் கொடுக்க முடியுமா?

சரண்யா சுமார் 5 மாதங்கள் திவ்யாவாக நடித்தார். அவர் விலகியதும் சாயாசிங் ஒப்பந்தம் ஆனார். எவ்வளவுதான் அனுபவசாலியாக இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்துக்கு மாற்றாக வரும்போது, நேயர்கள் மனதில் இடம்பிடிக்க சற்று அவகாசம் எடுக்கும். ஆரம்பத்தில் சாயாவுக்கும் அந்த இடைவெளி இருந்தது. இப்போது சுமார் 40 அத்தியாயங்கள் நடித்துவிட்டார். திவ்யாவாக சாயாவை நேயர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

SCROLL FOR NEXT