'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பைப் பார்த்து வியந்த சுஹாசினி மணிரத்னம், தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளப் புகைப்படம் கூட வெளியாகக் கூடாது என்பதில் படக்குழு கவனமாக உள்ளது. இதனால், நடிகர்கள் யாருமே படப்பிடிப்பு குறித்த தகவலோ, படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களோ வெளியிடாமல் இருக்கிறார்கள்.
இதுவரை படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் லோகோ வடிவமைப்பு ஆகியவை மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதன்முறையாகப் படப்பிடிப்பு தளம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் சுஹாசினி மணிரத்னம்.
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தளம் குறித்து சுஹாசினி தனது ட்விட்டர் பதிவில், "படப்பிடிப்பைப் பார்த்தேன். அற்புதம். ஒவ்வொரு நடிகரும் சரி, அந்த அரங்கம், அந்த சூழல், அந்த மொழி என அனைத்தும் தனித்தரம்" என்று தெரிவித்துள்ளார்.