சமூக வலைதளத்தில் கிளம்பிய 'ஒஸ்தி' 2-ம் பாகம் குறித்த வதந்திக்கு, சத்யஜோதி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2011-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி வெளியான படம் 'ஒஸ்தி'. தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிம்பு, ரிச்சா, சந்தானம், ஜித்தன் ரமேஷ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்தார். இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தபங்' படத்தின் ரீமேக் தான் 'ஒஸ்தி'.
'தபங்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகிவிட்டன. ஆனால், 'ஒஸ்தி' படத்துக்கு அடுத்த பாகம் என்பது தயாராகவே இல்லை. மேலும், இந்தப் படத்துக்குப் பிறகு தரணியும் படம் இயக்கவில்லை.
இந்நிலையில், திடீரென்று 'ஒஸ்தி 2' பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சிம்பு ரசிகர்கள் சிலர் உற்சாகமானார்கள்.
ஆனால், இந்தச் செய்திக்கு சத்யஜோதி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையுமே நடைபெறவே இல்லை. செய்தியே தவறு என சத்யஜோதி நிறுவனம் கூறியுள்ளது.