'தர்பார்' படத்துக்கான டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக டி.ராஜேந்தர் வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டார். தான் பதவி ஏற்றவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது 'தர்பார்' படத்துக்கான டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக டி.ராஜேந்தரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளிக்கும் வகையில் டி.ராஜேந்தர் பேசும்போது, "இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. நான் ஒரு கருத்து சொல்கிறேன், அதிலிருந்து விடை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். 'பாகுபலி' என்ற படம் பிரம்மாண்டமான வெற்றி. அந்தப் படத்தை 50 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் மக்கள் பார்த்தார்கள். 1.000 ரூபாய் கொடுக்கவில்லை. பல கோடி வசூல் செய்தது. எந்த மொழியில் படம் எடுக்கப்பட்டது என்பது முக்கியமில்லை. பிரம்மாண்டம்தான் அதற்குக் காரணம்.
ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தனது அந்தஸ்துக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார். கமல், அஜித், விஜய் ஆகியோரும் அப்படித்தான். அவர்களுடைய படத்துக்கும், மற்ற நடிகர்களுடைய படத்துக்கும் ஒரே டிக்கெட் விலையைக் கொடுங்கள் என்றால் மக்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? வெகுஜன மக்கள் திரையரங்கிற்கு வரும் வழி அடைக்கப்பட்டுள்ளது.
சென்னை - செங்கல்பட்டு ஏரியாவில் 2 திரையரங்குகளில் மட்டும்தான் 'தர்பார்' படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குள் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?. அதுமட்டுமல்ல, வட ஆற்காடு - தென் ஆற்காடு ஏரியாவில் இன்னும் அந்தப் படத்தின் வியாபாரம் முடியவில்லை. சினிமாவில் பல பிரச்சினைகள் உள்ளன. நாம் மேலோட்டமாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார் டி.ராஜேந்தர்.