மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.
'பட்டாஸ்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகிய இரண்டையுமே முடித்துக் கொடுத்துவிட்டார் தனுஷ். இதில் 'பட்டாஸ்' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதால், அதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியிருந்தார் தனுஷ். ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 3) தொடங்கியது. ஆனால், இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
'கர்ணன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ராஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகர் லால், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.