மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான 'சுமோ' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுமோ'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சுமோ வீரர் Yoshinori Tashiro நடித்துள்ளார்.
'சுமோ' படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் என முதலில் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், பல்வேறு திரைப்படங்கள் வெளியாவதால், பொங்கல் வெளியீடு என அறிவித்தார்கள். தற்போது வரை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்காததால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
'தர்பார்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்கள் வெளியாவதால், போதிய திரையரங்குகள் கிடைக்காது என்பதால் 'சுமோ' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், ஜனவரி இறுதியிலும் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளதால் பிப்ரவரியில் வெளியிடலாம் எனப் படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரதான காட்சிகளை ஜப்பானில் காட்சிப்படுத்தி இருப்பதால், இந்தப் படத்தை ஜப்பானிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.