கொரியப் படமான 'சைலன்ஸ்ட்' படத்தின் தழுவல்தான் 'மாஸ்டர்' எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த போஸ்டர் இதன் காப்பி, படத்தின் கதை இப்படியிருக்கும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, கொரிய மொழிப் படமான 'சைலன்ஸ்ட்' படத்தின் தழுவலே 'மான்ஸ்டர்' என்று தகவல் வெளியானது. இந்தத் தகவல் பெரும் வைரலாகப் பரவியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, "'மாஸ்டர்' எந்தவொரு படத்தின் தழுவலும் அல்ல. லோகேஷ் கனகராஜின் கதை" என்று படக்குழுவினர் முடித்துக் கொண்டார்கள்.
'மாஸ்டர்' படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்கள்.
கொரியப் படமான 'சைலன்ஸ்ட்' படத்தின் கதை என்ன?
தென்கொரியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே ’சைலன்ஸ்ட்’. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான விசேஷ பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்கிறார் நாயகன் இன் ஹோ. ஒரு வருடத்துக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மனைவி, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் மகள் என இன் ஹோவின் வாழ்க்கையும் சோகங்கள் நிறைந்ததுதான். ஆனால் தன் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க உற்சாகத்துடன் வரும் இன் ஹோவிடம் மாணவர்கள் சகஜமாக இருக்க மறுக்கின்றனர்.
அவனிடமிருந்து விலகி இருக்கவே பார்க்கின்றனர். இன் ஹோ விடாமல் அந்தக் குழந்தைகளின் அன்பைச் சம்பாதிக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இன் ஹோவிடம் உரையாட ஆரம்பிக்கின்றனர். அப்போதுதான் பல வருடங்களாக மற்ற ஆசிரியர்களால் இந்த மாணவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர் என்பதும், இதில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், உள்ளூர் போலீஸ், வழக்கறிஞர்கள், தேவாலயங்கள் என அனைவரும் கூட்டு என்பதும், அவர்கள் அங்கு நடக்கும் விஷயங்களை மூடி மறைக்கின்றனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையும் இன் ஹோவுக்குத் தெரிய வருகிறது.
மனித உரிமை ஆர்வலரான யூ ஜின்னுடன் சேர்ந்து இன் ஹோ பள்ளிக் குழந்தைகளுக்காகப் போராட ஆரம்பிப்பதே படத்தின் மீதிக் கதை.
இப்படம் வெளியான சமயத்தில் தென் கொரியாவில் பெரும் பொது விவாதத்தை உருவாக்கியது. புதிதாகச் சட்டங்கள் வரையறுக்கப்பட்டு பாலியல் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் சிலருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. வசூல் ரீதியாகவும், தொடர்ந்து மூன்று வாரங்கள் வசூலில் முதலிடத்தில் இருந்த ’சைலன்ஸ்ட்’, பத்து வாரங்கள் தொடர்ந்து தென் கொரியத் திரையரங்குகளில் ஓடியது.