'திருமணம்' படத்தை வெகுமக்கள் பார்க்கவில்லை என்று இயக்குநர் சேரன் வெளிப்படையாகத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'திருமணம்'. மார்ச் 1-ம் தேதி வெளியான இப்படத்தில், உமாபதி ராமையா, சுகன்யா, காவ்யா சுரேஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர். விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக இப்படம் சோபிக்கவில்லை.
இந்தப் படத்துக்கு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், இயக்குநர் சேரனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கியுள்ளனர். இதற்குப் பலரும் இயக்குநர் சேரனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
வாழ்த்து ஒன்றைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் "’திருமணம்’ திரைப்படத்தை வெகுவான மக்கள் பார்க்கவில்லை. மக்கள் அங்கீகாரம் கிடைக்காமல் விருது வாங்குவது மனதுக்கு ஒவ்வவில்லை. ஆயினும் அதை மதித்து சிலர் அழைத்து கௌரவிக்கும்போது மறுக்க முடியவில்லை. நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.