’நம்ம வீட்டுப் பிள்ளை’ படப்பிடிப்பு தளத்தில்... 
தமிழ் சினிமா

மீண்டும் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி?

செய்திப்பிரிவு

பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் சிவகார்த்திகேயனை நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பாண்டிராஜ். இந்தக் கூட்டணி முதலில் 'மெரினா' படத்தில் இணைந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் இணைந்தார்கள். அந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

நீண்ட வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி கடந்த ஆண்டு 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் இணைந்தது. இந்தப் படமும் கடந்த ஆண்டு வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "’நம்ம வீட்டுப் பிள்ளை’ வெற்றிக்குப் பிறகு எந்தக் களத்தில் படம் பண்ணலாம் என்று யோசித்து, புதுக்களத்தில் கதையொன்றை எழுதி வருகிறார். அதை முடித்தவுடன் தான் நாயகன் யார் என்பதை முடிவு செய்யவுள்ளார் பாண்டிராஜ்.

இப்போதைக்கு சிவகார்த்திகேயனை பாண்டிராஜ் சந்திக்கவில்லை. கதை எழுதுவதில் தீவிரம் காட்டி வருகிறார். அப்படியொரு பேச்சுவார்த்தை தொடங்கவுமில்லை. அதற்கு எப்படி இப்படியொரு செய்தி வெளியானது என்றே தெரியவில்லை" என்று தெரிவித்தார்கள்.

'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து உருவாகும் படத்தின் இயக்குநர் யார் என்பதை இன்னும் சிவகார்த்திகேயன் முடிவு செய்யவில்லை. ஆகையால் தான் இப்படியான வதந்திகள் வெளியாகி வருகின்றன.

SCROLL FOR NEXT